தகுதிச்சான்று இல்லாமல் இயங்கிய 132 வாகனங்கள் பறிமுதல்

சேலம் சரகத்தில் தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 132 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-07-26 22:15 GMT
சேலம்,  

சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி மாவட்டங்களில் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தனியார் பஸ்கள், வேன்கள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் விதி முறைகளுக்கு உட்பட்டு இயக்கப்படுகிறதா? என்று சோதனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்தில் 5 ஆயிரத்து 550 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. அப்போது அளவுக்கு அதிகமாக சரக்குகள் மற்றும் விதிமுறையை மீறி பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 1,604 வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.19 லட்சத்து 3 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறும் போது, ‘சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் நடத்திய அதிகாரிகள் சோதனையில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களிடம் இருந்து ரூ.19 லட்சத்து 3 ஆயிரமும், வரியாக ரூ.12 லட்சத்து 36 ஆயிரமும் வசூலிக்கப்பட்டது.

தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 34 லாரிகள், 70 ஆட்டோக்கள் உள்பட 132 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனைகள் தொடர்ந்து நடத்தி விதிமுறையை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

மேலும் செய்திகள்