இறப்பு சான்றிதழ் வழங்க கொத்தனாரிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

குளச்சலில் இறப்பு சான்றிதழ் வழங்க கொத்தனாரிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார். திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-26 22:45 GMT
குளச்சல்,

குமரி மாவட்டம் குளச்சல் அருகே பெத்தேல்புரத்தை சேர்ந்தவர் ஆன்றனி பிலோமின் சேவியர் (வயது 51). கொத்தனார். இவருடைய தந்தை மரியசேமன் என்பவர் கடந்த 2002-ம் ஆண்டு இறந்து விட்டார். ஆனால் இதுவரை அவருடைய இறப்பு சான்றிதழை ஆன்றனி பெறவில்லை. இந்தநிலையில் தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு கல்லுக்கூட்டத்தில் உள்ள பிறப்பு- இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

அந்த அலுவலகத்தில் பதிவாளராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியம் (54). இவர் இரணியல் கோணத்தை சேர்ந்தவர். இறப்பு சான்றிதழ் கொடுக்க வேண்டுமென்றால் ரூ.1,000 லஞ்சமாக தர வேண்டும் என்று சுப்பிரமணியம், ஆன்றனியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஆன்றனிக்கு லஞ்சம் கொடுக்க மனமில்லை.

இதுகுறித்து ஆன்றனி நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை ஆன்றனியிடம் கொடுத்தனர். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைபடி ஆன்றனி அந்த பணத்துடன் கல்லுக்கூட்டம் அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்றார்.

ஆனால் அங்கு சுப்பிரமணியம் இல்லை. இதனால் செல்போனில் தொடர்பு கொண்ட போது, சுப்பிரமணியம் திங்கள் சந்தை பஸ் நிலையத்தில் நிற்பதாக ஆன்றனியிடம் கூறினார். மேலும் அங்கு வந்து 1000 ரூபாய் கொடு, அதுவரை அங்கேயே காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஆன்றனி திங்கள்சந்தை பஸ்நிலையத்துக்கு சென்று சுப்பிரமணியத்திடம் ரூ.1,000 கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் கல்லுக்கூட்டம் அலுவலகத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்