பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணியை புறக்கணித்து ஆசிரிய,ஆசிரியைகள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணியை புறக்கணித்து ஆசிரிய, ஆசிரியைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-26 23:00 GMT
தர்மபுரி,

பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் மையம் தர்மபுரி ஆட்டுக்காரம்பட்டியில் உள்ள பரம்வீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணியில் ஈடுபட்ட ஆசிரிய, ஆசிரியைகள் திடீரென பணியை புறக்கணித்து விடைத்தாள் திருத்தும் மைய வளாகத்தின் முன்பகுதியில் திரண்டனர். அங்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும். துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்ட முதன்மை கல்வி அலுவலரை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்