மண்எண்ணெய் ஊற்றி பெண் எரித்துக் கொலை
சங்கராபுரம் அருகே மண்எண்ணெய் ஊற்றி பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர், தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சங்கராபுரம்,
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சங்கராபுரம் அருகே உள்ள மணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் ராஜா (வயது 33), கூலி தொழிலாளி. இவரது மனைவி உமா(32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய ராஜா தினசரி மதுகுடித்து விட்டு வந்து உமாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று குடி போதையில் வீட்டுக்கு வந்த ராஜாவை உமா தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த உமா, உன்னுடன் வாழ்வதை விட சாவதே மேல் என கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உமாவின் மீது ஊற்றினார். அப்போது குடிபோதையில் இருந்த ராஜா மீதும் மண்எண்ணெய் கொட்டியதாக தெரிகிறது. பின்னர் அவர் உமா மீது தீ வைத்து விட்டு, அவரது அருகிலேயே நின்று கொண்டிருந்தார். இதில் ராஜாவின் மீதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இருவரது உடலிலும் தீப்பற்றி எரிந்ததில் வலியால் அவர்கள் அலறி துடித்தனர். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 2 பேர் மீதும் எரிந்த தீயை அணைத்து, அவர்களை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் இருவரும் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உமா பரிதாபமாக உயிரிழந்தார். ராஜாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து இறந்த உமாவின் தாய் ராணி(52) சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்த ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தொழிலாளி எரித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.