வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

உப்பிலியபுரம் அருகே வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

Update: 2018-07-26 22:45 GMT
உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம், எரகுடி ஊராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை விவசாய தொழிலாளர்கள் ஆண்களும், பெண்களுமாக 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினார்கள். பின்னர் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கணேசன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் லிங்கராணி, கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

தகவல் அறிந்த உப்பிலிய புரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ரேவதி, மனோகரன், ஒன்றிய மேற்பார்வையாளர் விஜயலட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நெடுஞ்செழியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

இதில், இன்னும் 10 நாட்களில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அங்கு 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்