குடிநீர் குழாயை அகற்ற முயன்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

க.பரமத்தி அருகே குடிநீர் குழாயை அகற்ற முயன்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-26 22:45 GMT
க.பரமத்தி,

க.பரமத்தி அருகேயுள்ள ஆதிரெட்டிப்பாளையத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதற்கு க.பரமத்தியில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர் சரவர வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஒன்றிய ஆணையர்கள் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று எதனால் ஆதிரெட்டிப்பாளையம் பகுதிக்கு குடிநீர் வரவில்லை என்று க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் யோகராஜ் ஆகியோர் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்களில் ஆய்வு செய்தனர். அப்போது ஆதிரெட்டிப்பாளையத்திற்கு செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் காந்திநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஏர்வால்வில் அப்பகுதி பொதுமக்கள் குழாய் அமைத்து தண்ணீர் பிடித்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த குழாயை அடைக்க முயன்றனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது காந்திநகர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர், மாணவ- மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி கூட்டுக்குடிநீர் குழாயின் ஏர்வால்வில் குழாய் அமைத்து தண்ணீர் பிடித்து வருகிறோம். அதனை அடைக்க கூடாது என்று கூறினர்.

இதையடுத்து அதிகாரிகள் கூறுகையில், காந்திநகர் பகுதியில் குழாய் அமைத்து தண்ணீர் பிடிப்பதால் ஆதிரெட்டிப்பாளையம் பகுதிக்கு குடிநீர் செல்லவில்லை. எனவே உங்களுக்கு மாற்று வழியில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட பின் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் அமைத்துள்ள குழாய் அடைக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்