60 சதவீத உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன சட்டமன்ற குழு தலைவர் தகவல்

‘60 சதவீத உறுதிமொழிகள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன’ என்று கோவையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் குழு தலைவர் இன்பதுரை கூறினார்.

Update: 2018-07-26 21:45 GMT
கோவை,

தமிழ்நாடு சட்டசபையின் அரசு உறுதிமொழி குழுவின் ஆய்வுக்கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசு உறுதிமொழி குழுவின் தலைவரும், சட்டமன்ற உறுப் பினருமான ஐ.எஸ்.இன்பதுரை (ராதாபுரம்), எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.அர்ச்சுனன் (கோவை தெற்கு), கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), அ.மனோகரன் (வாசுதேவ நல்லூர்), ஜே.கே.என்.ராமஜெயலிங்கம் (ஜெயம்கொண்டம்), ராமு (குன்னூர்) மற்றும் சட்டபேரவை செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் பா.சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உறுதிமொழி குழு தலைவர் இன்பதுரை பேசியதாவது:-

சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது பொதுமக்களுக்கு தேவையான திட்டப்பணிகளுக்கு ஒவ்வொரு துறையின் மீதும் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெறும். அப்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் உறுதியளித்த பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக அரசு உறுதிமொழி குழு மாநிலம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் 152 உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் 65 உறுதிமொழிகள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. 27 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டதாக கருதப்பட்டு அறிக்கை அளிக்க இருக்கிறோம். அந்த வகையில் 60 சதவீத உறுதிமொழிகள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள உறுதிமொழிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு திட்டங்களை அறிவித்தாலும், அதற்கு செயல்வடிவம் கொடுத்து அரசின் எண்ணத்தை பிரதிபலிப்பவர்கள் அலுவலர்கள் தான்.

எனவே மக்களுக்காக அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் எவ்வித சுணக்கமும் காட்டாமால் அலுவலர்கள் விரைந்து செயல்படுத்த வேண்டும். அரசின் திட்டங்களை செயல்படுத்து வதில் ஏதேனும் இடர்்பாடு இருந்தால் அரசு உறுதி மொழி குழுவிடம் தெரிவித்தால் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று குறைகள் களையப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வு கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ஹரிகரன், மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அதிகாரி துரை.ரவிச்சந்திரன், சப்-கலெக்டர்கள் காயத்ரி கிருஷ்ணன், கார்மேகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுதிமொழிக்குழு கோவை மத்திய சிறைச்சாலை, உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலப்பணிகள் மற்றும் கோவை மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. 

மேலும் செய்திகள்