தஞ்சையில் விமானப்படைக்கு 2–ம் கட்டமாக ஆட்கள் தேர்வு 2,400 இளைஞர்கள் பங்கேற்பு

தஞ்சையில் விமானப்படைக்கு 2–ம் கட்டமாக ஆட்கள் தேர்வு நேற்று நடந்தது. இதில் 2,400 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-07-26 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இந்திய விமானப்படை மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு கடந்த 23–ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் சென்னை, அரியலூர், கோவை, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

நேற்று 2–ம் கட்ட ஆட்கள் தேர்வு நடந்தது. இதில் ராமநாதபுரம், சேலம், நாமக்கல், சிவகங்கை, நீலகிரி, தேனி, நெல்லை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களை சேர்ந்தவர்களும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த என 2,400–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


தேர்வில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ்கள் முதலில் சரிபார்க்கப்பட்டன. பின்னர் உயரம், உடல் எடை ஆகியவை சரிபார்க்கப்பட்டன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 6 நிமிடங்கள் 30 வினாடிகளுக்குள் கடந்து செல்லுதல், 1 நிமிடத்திற்குள் 10 முறை உட்கார்ந்து எழுதல் போன்ற உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

மேலும் உடலில் தோல் நோய்கள், தொற்றுநோய்கள் இருக்கிறதா? என்றும், பார்வை திறன் நன்றாக இருக்கிறதா? என்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உடலில் பச்சை குத்தியிருந்தவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது

விமானப்படையின் குரூப்கமாண்டர் ஸ்ரீவத்சன் தலைமையில் விங் கமாண்டர்கள் சைலேஷ்குமார், ஜமால் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் தேர்வு நடந்தது. கடந்த 23–ந்தேதி நடைபெற்ற தேர்வில் 934 பேர் கலந்துகொண்டனர். இதில் 514 பேர் எழுத்து தேர்வுக்கு சென்றனர். இதில் 12 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்