தூத்துக்குடி– திருச்செந்தூர் சாலையில் அதிகரித்து வரும் விபத்துகளால் அச்சம் சிக்னல் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி– திருச்செந்தூர் சாலையில் விபத்துகள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-07-26 21:45 GMT
ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி– திருச்செந்தூர் சாலையில் விபத்துகள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அந்த பகுதியில் ரவுண்டானாவுடன் சிக்னல் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அதிகரிக்கும் விபத்துகள் 

தூத்துக்குடி– திருச்செந்தூர் சாலையில் 24 மணி நேரமும் லட்சக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள், பஸ்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் முத்தையாபுரம் மெயின் பஜாரில் இருந்து துறைமுகம் செல்லும் சாலையில் சில ஊர்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் அந்த சாலையிலும் அடிக்கடி கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் பல ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி– திருச்செந்தூர் ரோட்டில் இருந்து துறைமுகம் செல்லும் சாலை தொடக்கத்தில் போலீஸ் நிழற்குடை அமைக்கப்பட்டு, ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் பணியில் இருந்தார். பின்னர் சாலை விரிவாக்கத்தின் போது அந்த நிழற்குடை அகற்றப்பட்டது.

சிக்னல் அமைக்க வேண்டும் 

அதன் பின்னர் அந்த இடத்தில் வாகனங்கள் அதிவேகத்தில் சென்று வருகின்றன. இதனால் அந்த இடத்தில் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த இமாம் அபுபக்கர் சித்திக் என்பவர் தனது மொபட்டில் தூத்துக்குடியில் இருந்து ஸ்பிக்நகருக்கு சென்று கொண்டு இருந்தார். அவர் முத்தையாபுரம் மெயின் பஜாரில் வந்த போது, துறைமுக சாலையில் இருந்து அதிவேகமாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். ஆனால் அவர் வந்த மொபட் காரின் அடியில் சிக்கி கொண்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து அந்தபகுதியில் நடக்காமல் இருக்க அந்த பகுதியில் ரவுண்டானா அமைத்து, போக்குவரத்து போலீசார் சிக்னல் அமைப்பதுடன், அந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்