சொத்து வரி உயர்வை திரும்ப பெறக் கோரி 30–ந் தேதி தி.மு.வினர் ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை திரும்ப பெறக் கோரி வருகிற 30–ந் தேதி (திங்கட்கிழமை) நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.;
நெல்லை,
சொத்து வரி உயர்வை திரும்ப பெறக் கோரி வருகிற 30–ந் தேதி (திங்கட்கிழமை) நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
சொத்து வரி
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படி, தமிழக அரசின் 100 சதவீதம் சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் ஆடித் தவசு திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தலைமை கழக அனுமதியுடன் வருகிற 30–ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
5 இடங்களில்...
மேற்கு மாவட்டம் சார்பில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் முன்பு அந்தந்த பகுதி நகர செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. மொத்தம் 5 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.