நெல்லை அருகே பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது 12 பவுன் நகை மீட்பு

நெல்லை அருகே பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவனிடம் இருந்து 12 பவுன் நகை மீட்கப்பட்டது.

Update: 2018-07-26 22:00 GMT

நெல்லை, 

நெல்லை அருகே பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவனிடம் இருந்து 12 பவுன் நகை மீட்கப்பட்டது.

நகை பறிப்பு

நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியில் ரோட்டில் நடந்து சென்ற பெண்களிடம் மோட்டார்சைக்கிளில் வரும் மர்மநபர்கள் நகை பறித்துச் செல்லும் சம்பவங்களும், கதவை உடைத்து திருடிய சம்பவங்களும் அடுத்தடுத்து நடைபெற்று வந்தன.

கடந்த மே மாதம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஆறுமுகத்தம்மாள் என்பவர் தாழையூத்து அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்மநபர், அவர் அணிந்திருந்த 12 பவுன் நகையை பறித்துச் சென்று விட்டார். இதுதொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர். தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

கொள்ளையன் கைது

தனிப்படை போலீசாரின் விசாரணையில், மேலப்பாளையத்தை சேர்ந்த சாகுல் அக்பர் என்பவருடைய மகன் செய்யது என்ற முகமது செய்யது (வயது 19) நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று செய்யதுவை கைது செய்தனர்.

மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த 12 பவுன் தங்க நகையையும் போலீசார் மீட்டனர். செய்யது மீது பேட்டை உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்