ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.22 லட்சம் திருடிய ஊழியர்கள் கைது

கோவையில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.22 லட்சம் திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2018-07-25 23:45 GMT

கோவை,

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவை நகரில் 250 ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை இந்த நிறுவனம் செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் ஒண்டிப்புதூரை சேர்ந்த தாஜுதீன் (வயது 30), ராமநாதபுரத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (26) ஆகிய 2 பேர் வேலைபார்த்து வந்தனர். இவர்கள் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தணிக்கை செய்யப்பட்டது. அப்போது தனியார் வங்கிக்கு சொந்தமான காந்திபுரம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்பட்ட ரூ.21 லட்சத்து 99 ஆயிரம் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் நிறுவனத்தினர் அந்த 2 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 4 முறை தாஜுதீனும், ஆரோக்கிய தாசும் பணத்தை நிரப்பிய பிறகு மீண்டும் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அவர்கள் 2 பேரும் ரகசிய எண்ணை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து ரூ.21 லட்சத்து 99 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் மேலாளர் ஜெகதீசன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உதவிய அக்பர் அலி என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

நாங்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனம் மூலம் செய்து வந்தோம். கோவையில் உள்ள 250 ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்புவோம். தினமும் அதிகளவில் பணத்தை பார்க்கும்போது பணத்தின் மீது ஆசை வந்தது.

எனவே ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணத்தை எடுத்து ஆடம்பரமாக வாழ முடிவு செய்தோம். நாங்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு செல்வோம். அடிக்கடி பணம் வைக்க செல்வதால் அங்கு பணியில் இருக்கும் காவலாளிக்கு எங்கள் மீது சந்தேகம் வராது. அங்கு ஏ.டி.எம். எந்திரத்தை பழுது பார்ப்பதுபோல் ‌ஷட்டரை மூடிவிடுவோம். இதனால் வாடிக்கையாளர்கள் சந்தேகப்பட மாட்டார்கள்.

எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தின் ரகசிய குறியீட்டு எண் மூலம் திறந்து பணத்தை எடுத்துவிடுவோம். உயர் அதிகாரிகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எந்திரத்தில் உள்ள

டிரேயில் பண அளவை மாற்றி வைத்துவிடுவோம். ஒரு மாதத்தில் ரூ.21 லட்சத்து 99 ஆயிரத்தை கையாடல் செய்தோம். இந்த நிலையில்தான் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசில் சிக்கி கொண்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்