பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
ஆரோவில் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
வானூர் தாலுகா ராவுத்தன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவருடைய மனைவி விஜயகுமாரி (வயது 28). இவர்களுடைய மகன் விமல் (5) ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுவன் விமலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக விஜயகுமாரி தனது மாமனார் கோவிந்தராஜியுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
பள்ளியின் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென விஜயகுமாரி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.
இதுகுறித்து விஜயகுமாரி, ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.