அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடிக்கும் டாக்டர்களுக்கு கட்டாய கிராம சேவை - முதல்மந்திரி குமாரசாமி அறிவிப்பு

அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடிக்கும் டாக்டர்கள் கிராமத்தில் ஒரு ஆண்டு கட்டாயம் சேவையாற்ற வேண்டும் என்று குமாரசாமி அறிவித்துள்ளார்.

Update: 2018-07-25 23:45 GMT
பெங்களூரு,

பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் ஜெயதேவா அரசு இதயநோய் ஆஸ்பத்திரியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையத்தை முதல்-மந்திரி குமாரசாமி திறந்துவைத்தார்.

பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் ஜெயதேவா அரசு இதயநோய் ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மைய தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டு, அந்த மையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கிராமப்புறங்களில் மக்களுக்கு சுகாதார மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும். மருத்துவ சேவை பெங்களூருவுக்கு மட்டுமே கிடைக்காமல், ஒவ்வொரு கிராமத்திற்கும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். மாநில அரசு டாக்டர்களை உரிய மரியாதையுடன் நடத்தும். கர்நாடகத்தில் மருத்துவத்துறை அதிகாரிகளின் கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும்.

மேலும் முக்கியமான அரசு ஆஸ்பத்திரிகளின் இயக்குனர் கூட்டத்தை நடத்தி, மருத்துவ சேவைகள் சாமானிய மக்களுக்கு எளிதாக கிடைக்க செய்வது குறித்து ஆலோசனை நடத்துவேன். அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடிக்கும் டாக்டர்கள் கிராமப்புறத்தில் ஒரு ஆண்டு கட்டாயம் சேவையாற்ற வேண்டும்.

ஜெயதேவா இதயநோய் ஆஸ்பத்திரி உலக அளவில் பெயர் பெற்று விளங்குகிறது. அதுபோல் அரசின் மற்ற ஆஸ்பத்திரிகளும் சிறப்பான முறையில் செயல்பட முயற்சி செய்தால், அதற்கான முழு ஒத்துழைப்பை கொடுக்க மாநில அரசு தயாராக உள்ளது. ஏழைகளுக்கு குறைந்த செலவில் தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும்.

டாக்டர்கள், ஆஸ்பத்திரிகள் மீது நடைபெறும் தாக்குதல்களை தடுக்க கடந்த 2007-ம் ஆண்டு ஒரு சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சரியான முறையில் பணியாற்றும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.

சில நேரங்களில் டாக்டர்கள் நேர்மையான முறையில் பணியாற்றினாலும், அவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ள உதாரணங்கள் இருக்கின்றன. மறுவாழ்வு உடல் உறுப்புகள் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழை நோயாளிகள் பணம் செலுத்தாமல் ஜெயதேவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள். இங்கு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு பார்க்காமல், 50 லட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். ஒவ்வொரு துறையிலும், அமைப்பிலும் அரசியல் இருக்கிறது. ஆனால் ஜெயதேவா ஆஸ்பத்திரியில் பணியாற்றுபவர்கள் ஒரு குடும்பத்தை போல் இருந்து செயல்படுகிறார்கள். அதனால் தான் இந்த ஆஸ்பத்திரி இந்த அளவுக்கு பெயர் பெற்றுள்ளது. இவ்வாறு குமாரசாமி பேசினார்.

விழாவில் மருத்துவ கல்வித்துறை மந்திரி டி.கே.சிவக் குமார் பேசுகையில், “எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்த பிறகு தொழில் அடிப்படையிலான பயிற்சி படிப்புகளை தொடங்க அரசு ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் மருத்துவத்துறையில் தேவைக்கு ஏற்ப துணை மருத்துவ ஊழியர்களை நியமனம் செய்ய முடியும். இதனால் வேலை இல்லா பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும்.

தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ளூர் மாணவர்களுக்கு மருத்துவ இடங்களை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அடுத்த ஆண்டு முதல் நமக்கு அந்த பல்கலைக்கழகங்களில் 40 சதவீதம் வரை மருத்துவ இடங்கள் கிடைக்கும். ராமநகரில் ரூ.1,000 கோடி செலவில் மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும். பெங்களூருவை மருத்துவ சுற்றுலா நகரமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது“. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் சவுமியா ரெட்டி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்