லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு: காய்கறிகள் விலை உயர்வை அரசு தடுக்குமா?

லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும் நிலையில் காய்கறிகள் விலை உயர்வை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Update: 2018-07-25 23:30 GMT

புதுச்சேரி,

சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்க வரி வசூலிக்கவேண்டும், பெட்ரோல், டீசல் விலையை சேவை வரிக்குள் கொண்டுவர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 6–வது நாளாக நீடித்தது.

புதுவையில் இருந்தும் லாரிகள் இயக்கப்படவில்லை. புதுவையை பொறுத்தவரை காய்கறிகள், பழவகைகள், மளிகை பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்தே விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

பெரிய மார்க்கெட்டில் கடை வைத்துள்ள பெரிய வியாபாரிகள் தங்களது சொந்த லாரிகள் மூலம் தமிழக பகுதிகளில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் பெங்களூரு, ஊட்டி போன்ற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும். அந்த காய்கறிகள் வரத்து சற்று குறைந்துள்ளது. இருந்தபோதிலும் மினி லாரிகள் மூலம் ஓரளவுக்கு சரக்குகள் புதுவைக்கு எடுத்து வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் ஆகியன நேற்று கிலோ ரூ.30–க்கும், கேரட், பீன்ஸ் ரூ.60–க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் வாழைப்பழம் கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை விற்கப்பட்டது. காய்கறிகள் தட்டுப்பாடு இன்றி கிடைத்துவரும் நிலையில் புதுவையில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படாமல் உள்ளன. இதனால் நாளொன்றுக்கு ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே லாரி உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி புதுவை சட்டசபை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்கமாக லாரிகள் வேலை நிறுத்தத்தின்போது புதுவை அரசு சார்பு நிறுவனங்களான பாப்ஸ்கோ, பாசிக் நிறுவனத்துக்கு சொந்தமான லாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வெளிமாநிலங்களுக்கு சென்று காய்கறிகளை எடுத்து வரும். ஆனால் தற்போது அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் விரைவில் காய்கறி விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்