வியாபாரி வீட்டை மகளிர் சுயஉதவிக்குழுவினர் முற்றுகை
பழனியில், கடன் பெற்றுவிட்டு குடும்பத்தினருடன் தலைமறைவான வியாபாரியின் வீட்டை மகளிர் சுயஉதவிக்குழுவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பழனி,
பழனி சண்முகபுரம் திருவள்ளுவர் குறுக்குசாலையை சேர்ந்தவர் இசக்கிபாண்டியன். பழனி தபால் நிலையம் அருகே பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சுடலி. இவர், அந்த பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை என மொத்தம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த தொகையை முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு திருப்பி செலுத்தாமல் அவர் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து குழுக்களின் நிர்வாகிகள் அவரை சந்தித்து கேட்ட போது, இசக்கிபாண்டியன் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் முறையாக பதிலளிக்காததுடன், குழு நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதனால் அச்சமடைந்த குழுக்களின் நிர்வாகிகள் பழனி நகர் போலீசில் கடந்த 9-ந்தேதி இதுகுறித்து புகார் அளித்தனர். மேலும் இசக்கிபாண்டியனும், சுடலியும் மகளிர் சுய குழுக்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், அந்த பணத்தை வசூலித்து தரும்படியும் புகாரில் தெரிவித்திருந்தனர். அந்த புகாரின் மீது பழனி நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இசக்கிபாண்டியன் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகினார். இதையறிந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் திருவள்ளுவர் குறுக்குசாலையில் அவர் வசித்து வந்த வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த சந்திரா என்பவர் கூறுகையில், ‘தம்பதியினர் இருவரும், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். நாங்கள் புகார் அளித்த போதே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவர்கள் தலைமறைவாகி இருக்க மாட்டார்கள். தற்போது அவர்கள் வாங்கிய கடனை நாங்கள் செலுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தலைமறைவானவர்களை கண்டுபிடித்து எங்கள் பணத்தை பெற்றுத்தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.