நாமக்கல் சுங்கச்சாவடி அருகே கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி கல்வீச்சு; டிரைவர் காயம்

நாமக்கல் சுங்கச்சாவடி அருகே கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி மர்ம கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் கண்ணாடி உடைந்து டிரைவர் காயம் அடைந்தார். கல் வீசிய அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-07-25 22:45 GMT
பரமத்திவேலூர்,

அரியானா மாநிலம், கட்டின் தாலுகா, பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சகாபூ(வயது 40). கன்டெய்னர் லாரி டிரைவர். இவர் ஓசூரில் இருந்து மோட்டார் சைக்கிள்களை கன்டெய்னர் லாரியில் ஏற்றி கொண்டு ராஜபாளையத்துக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். அப்போது நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் சோதனைச்சாவடியை கடந்து கோனூர் கந்தம்பாளையம் அருகே கன்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது.

அங்கு சாலையோரம் நின்றிருந்த மர்ம நபர்கள் திடீரென்று கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி டிரைவர் சகாபூவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் போது எப்படி சரக்குகளை ஏற்றி கொண்டு செல்லலாம் என்று டிரைவரிடம் தகராறு செய்தனர்.

பின்னர் திடீரென்று அந்த கும்பல் கன்டெய்னர் லாரியின் முன்பக்க கண்ணாடி மீது கற்களை வீசியது. அதன் பிறகு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. திடீரென்று கற்கள் விழுந்ததால் கன்டெய்னர் லாரியின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதில் டிரைவர் சகாபூ காயம் அடைந்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் ஓடி வந்து டிரைவர் சகாபூவை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் செய்யவில்லை.

சிகிச்சை முடிந்ததும் அவர் மீண்டும் கன்டெய்னர் லாரியை எடுத்து கொண்டு ராஜபாளையத்துக்கு ஓட்டி சென்றார். கன்டெய்னர் லாரி மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததால் அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகிறார்கள். அதோடு கன்டெய்னர் லாரி மீது கற்களை வீசிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்