கூடலூரில் காட்டு யானைகள் தாக்கி தொழிலாளி வீடு சேதம்: கிராம மக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் போலீஸ் குவிப்பு
கூடலூரில் காட்டு யானைகள் தாக்கி தொழிலாளி வீடு சேதம் அடைந்தது. இதனால் கிராம மக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மாணவ–மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று நிம்மதியாக வீடு திரும்ப முடியவில்லை. மேலும் பணி முடிந்து மாலை அல்லது இரவில் தொழிலாளர்கள் அச்சத்துடன் வீடுகளுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்கவே பெரும்பாலான கிராம மக்கள் கூடலூருக்கு சென்று விட்டு மாலை 4 மணிக்கு வீடுகளுக்கு திரும்ப வேண்டிய நிலை உள்ளது.
நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு கூடலூர் அருகே தேவாலா வாழவயல், அட்டி பகுதியில் காட்டு யானைகள் நுழைந்து வீடுகள், காரை சேதப்படுத்தியது. ஒரு வீட்டை தாக்கும் போது காட்டு யானையின் தந்தம் ஒன்று சிறிய அளவில் உடைந்து விழுந்தது. இதனை வனத்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து காட்டு யானைகளை பட்டாசு வெடித்து விரட்டினர். இந்த நிலையில் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி காந்திநகர் மற்றும் சின்ன சூண்டி குரும்பர் காலனி பகுதியில் 5 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முகாமிட்டது.
இதனால் கிராம மக்கள் அச்சத்துடன் வீடுகளில் இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கோவிந்தராஜ், அவரது மனைவி கவிதா ஆகியோர் தங்களது வீட்டில் இருந்தனர். இந்த சமயத்தில் குட்டி யானை திடீரென கோவிந்தராஜ் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து கொண்டே உள்ளே புகுந்தது. இதை சற்றும் எதிர்பாராத கோவிந்தராஜ், அவரது மனைவி கவிதா ஆகியோர் அலறி அடித்தவாறு வீட்டின் பின்பக்க வாசல் வழியாக வெளியே ஓடி உயிர் தப்பினர். இந்த சமயத்தில் வீட்டுக்குள் புகுந்த குட்டி யானை அங்கு இருந்த டி.வி. உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் பின்பக்க வாசல் வழியாக குட்டியானை வெளியே வந்தது. பின்னர் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து குட்டி யானையை கூச்சலிட்டு விரட்டினர். இதனால் குட்டி யானை அங்கிருந்து சென்றது. இதனால் கோவிந்தராஜ், கவிதா ஆகியோர் மீண்டும் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது இரவு 9 மணிக்கு குட்டி யானை மீண்டும் அதே பகுதிக்கு வந்தது. மேலும் 3 காட்டு யானைகளும் அதன் கூட வந்து இருந்தது. பின்னர் கோவிந்தராஜ் வீட்டை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. தொடர்ந்து வீட்டு சுவரை காட்டு யானை ஒன்று முட்டி உடைத்தது. இதனால் வீடு பலத்த சேதம் அடைந்தது. அப்போது வீட்டில் இருந்து கோவிந்தராஜ், அவரது மனைவி கவிதா ஆகியோர் பயத்தில் அலறினர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் ஓவேலி வன காப்பாளர்கள் சுபேத்குமார், பாலசுப்பிரமணி, கிருபானந்தகுமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் வனத்துறையினரை விரட்டியது. மேலும் இரவு நேரம் என்பதால் வனத்துறையினர் தப்பி ஓடுவதற்கு வழி தெரியாமல் திணறினர். இந்த சமயத்தில் வேட்டை தடுப்புகாவலர் மணிகண்டன் என்பவரை காட்டு யானை தாக்க முயன்றது. இதனால் ஆற்றின் கரையோரம் ஆபத்தான பள்ளத்தாக்கில் குதித்து அவர் உயிர் தப்பினார்.
தொடர்ந்து வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை விரட்டினர். இதனால் யானைகள் அங்கிருந்து சென்றது. மேலும் கோவிந்தராஜ், அவரது மனைவி கவிதா ஆகியோர் உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு காட்டு யானைகள் தனியார் எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருந்தன. இதனால் காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளது என பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதனால் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதேபோல் காட்டு யானைகளால் பொதுமக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர், நியூகோப் போலீஸ் நிலையங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு சின்னசூண்டி பகுதியில் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு கூடலூர் உதவி வன பாதுகாவலர் விஜயன், வனச்சரகர்கள் குமார், ராமகிருஷ்ணன், வனவர் செல்லதுரை ஆகியோர் நேரில் வந்து சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர். அப்போது சேதம் அடைந்த வீட்டை சீரமைக்க உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதேபோல் தி.மு.க. நிர்வாகிகள் சின்னவர், பாபு, சத்தி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சையத்அனூப்கான், தம்பிராமசாமி ஆகியோர் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர். தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதிக்கு வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் தொடர் தாக்குதல் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.