கர்நாடகத்தில் 2017-ம் ஆண்டு சாலை விபத்துகளில் 10,609 பேர் சாவு

கர்நாடகத்தில் 2017-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 10,609 பேர் இறந்து உள்ளனர். சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட மாநிலத்தில் இந்திய அளவில் கர்நாடகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

Update: 2018-07-25 21:30 GMT
பெங்களூரு,

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடைபெற்ற சாலை விபத்துகளில் இறந்தவர்களின் புள்ளி விவரங்களை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வெளியிட்டது. அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டில் கர்நாடகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 10,609 பேர் இறந்துள்ளது தெரியவந்தது.

இதன்மூலம் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் கர்நாடகம் 4-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், கடந்த 2016-ம் ஆண்டில் கர்நாடகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 11,133 பேர் இறந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புள்ளி விவரத்தின்படி 2017-ஆம் ஆண்டில் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த வரிசையில் உத்தரபிரதேசம் முதல் இடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும், மராட்டியம் 3-வது இடத்திலும், ராஜஸ்தான் 5-வது இடத்திலும் உள்ளது. அதாவது, கடந்த 2017-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் 20,124 பேரும், தமிழ்நாட்டில் 16,157 பேரும், மராட்டியத்தில் 12,264 பேரும், ராஜஸ்தானில் 10,444 பேரும் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர்.

லட்சத்தீவில் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை. அந்தமான் நிகோபார் தீவில் 21 பேரும், டாமன் மற்றும் டையூவில் 36 பேரும், நாகலாந்தில் 41 பேரும் உயிரிழந்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்துகளில் மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 913 பேர் இறந்திருந்தனர். கடந்த 2017-ம் ஆண்டில் உயிரிழப்பு 1 லட்சத்து 50 ஆயிரத்து 785 ஆக உயர்ந்து இருப்பது கவலை அளிக்கக் கூடிய விஷயமாகும்.



மேலும் செய்திகள்