வைக்கோல் ஏற்றிச்சென்ற மினிலாரி தீப்பிடித்து எரிந்து நாசம்
காவேரிப்பாக்கம் அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற மினிலாரி மின்வயரில் உரசி தீப்பிடித்தது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வாகனம் திடீரென பழுதானதால் மற்றொரு வாகனம் வரவழைக்கப்பட்டது.;
பனப்பாக்கம்,
ஆற்காட்டில் உள்ள கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் தீனா (வயது 43), இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு தீவனம் வாங்குவதற்காக தீனா தனது மினி லாரியில் காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு கிராமத்திற்கு வந்தார். இங்கு வைக்கோலை வாங்கிய அவர் அதனை மினி லாரியில் ஏற்றினார்.
பின்னர் மினி லாரியுடன் புறப்பட்டார். வயல்வெளி வழியாக வந்த மினி லாரி அத்திப்பட்டி-சிறுகரும்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் மின்வயர்கள் தாழ்வாக காணப்பட்டது. மினி லாரி அந்த இடத்தை கடந்தபோது மின்வயர்கள் லாரியில் ஏற்றியிருந்த வைக்கோல் மீது உரசியது.
அடுத்த வினாடியே வைக்கோல் மீது தீப்பிடித்தது. அந்த வழியாக சென்றவர்கள் லாரியிலிருந்த வைக்கோல் தீப்பற்றி எரிவதை பார்த்து டிரைவருக்கு சைகை மூலம் தெரிவித்தனர். உடனே லாரியை அந்த இடத்திலேயே நிறுத்திய அவர் தீவிபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தெரிவித்தார். போலீசார், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்து விட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதனையடுத்து ராணிப்பேட்டை தீயணைப்பு படையினர் அங்கு வந்து மினி லாரியில் எரிந்து கொண்டிருந்த வைக்கோல் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் தீயணைப்பு வாகனத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் தீயணைக்கும் பணி பாதியிலேயே நின்றது. உடனே ஆற்காடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்படவே அங்கிருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வைக்கோலுடன் மினி லாரியும் எரிந்து நாசமானது.
இது குறித்து தீனா அளித்த புகாரின்பேரில் காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.