4 இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் திறப்பு
குடிமங்கலம், பொங்கலூர், மூலனூர், ஊத்துக்குளி ஆகிய 4 இடங்களில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
குடிமங்கலம்,
தமிழ்நாடு வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, விதை சான்றுத்துறை அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் குடிமங்கலம், பொங்கலூர், மூலனூர், ஊத்துக்குளி ஆகிய 4 இடங்களில் தலா ரூ.1½ கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் புதிதாக கட்டப்பட்டன.
இந்த மையங்களை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இதைதொடர்ந்து பெதப்பம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட குடிமங்கலம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.
ஊத்துக்குளியில் நடந்த விழாவில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பிரேம்குமார், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சசிரேகா, வேளாண்மை அலுவலர் மாரியப்பன், துணை வேளாண்மை அலுவலர் விஸ்வநாதன், ஊத்துக்குளி தாசில்தார் ரவீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் குடிமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வனத்துக்குள் திருப்பூர் என்ற தன்னார்வ அமைப்பு மூலம் 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். மேலும் குடிமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம் பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக செயல்படும் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் உடுமலை ஆர்.டி.ஓ. அசோகன், வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரசப்பன், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், குடிமங்கலம் வேளாண் உதவி இயக்குனர் மகாலிங்கம், திருப்பூர் வேளாண் விற்பனை குழு செயலாளர் ஆறுமுகராஜன், கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், ஆணையாளர் சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அதிகாரி (ஊராட்சி) மகேந்திரன், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.