டிராக்டர் கவிழ்ந்து கூலித்தொழிலாளி பலி

சிமெண்டு கற்கள் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து கூலித்தொழிலாளி பலினார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.;

Update: 2018-07-25 21:30 GMT

ஸ்ரீகாளஹஸ்தி, 

தொட்டம்பேடு மண்டலம் பெத்தக்கண்ணலி கிராமத்தில் இருந்து சிமெண்டு கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் ஸ்ரீசிட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த புச்சிநாயுடுகண்டிகை பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவில் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே இருந்த வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது.

அதில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய டிராக்டர் சாலை ஓரம் கவிழ்ந்தது. சிமெண்டு கற்கள் மீது அமர்ந்து டிராக்டரில் வந்த கூலித்தொழிலாளிகளான புச்சுநாயுடுகண்டிகையைச் சேர்ந்த கிருஷ்ணய்யா (வயது 42) பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தொட்டம்பேடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (30), நாகராஜ் (42), பெத்த வெங்கட்டய்யா (40) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.

டிராக்டர் டிரைவர் முத்து, அருகில் அமர்ந்து வந்த கூலித்தொழிலாளி ஒருவர் காயமின்றி தப்பினர். படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி புச்சிநாயுடுகண்டிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்