ஓட்டப்பிடாரம் அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட குழந்தைகள் மறுப்பு ஊழியர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி போராட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே சத்துணவு பிரிவு ஊழியர்களை இடமாற்றம் செய்யக்கோரி, பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் சத்துணவு சாப்பிட மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2018-07-25 21:00 GMT

ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் அருகே சத்துணவு பிரிவு ஊழியர்களை இடமாற்றம் செய்யக்கோரி, பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் சத்துணவு சாப்பிட மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தொடக்கப்பள்ளி 

ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி சந்ததியர் குடியிருப்பில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 27 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த பிரச்சினையில் கடந்த 19–ந் தேதி சமையலர் சந்தணமாரி வி‌ஷம் குடித்து விட்டார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பெற்றோர் எதிர்ப்பு 

இதைத் தொடர்ந்து சத்துணவு பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை இடமாற்றம் செய்யக் கோரி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வசந்தா, உதவி தொடக்க கல்வி அலுவலர் பத்மாவதி, யூனியன் ஆணையாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின்போது பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அனுப்புவோம், அதேசமயம் சத்துணவு பிரிவு ஊழியர்களை இடமாற்றம் செய்யும் வரை குழந்தைகளை சத்துணவு சாப்பிட அனுமதிக்க மாட்டோம் என பெற்றோர் திட்டவட்டமாக கூறினர்.

சத்துணவு சாப்பிட மறுப்பு 

இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகள் சென்றனர். பின்னர் மதிய உணவுக்காக குழந்தைகளை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆசிரியர்கள் சமாதானம் செய்து பார்த்தனர். ஆனால், சத்துணவு ஊழியர்களை இடமாற்றம் செய்யும் வரை, தங்களது குழந்தைகள் சத்துணவு சாப்பிட அனுமதிக்க மாட்டோம் என பெற்றோர் மீண்டும் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

இதனால் நேற்று பள்ளியில் சமைத்து வைத்திருந்த சத்துணவு சாப்பாடு வீணாகியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்