‘மனிதன் எங்கிருந்து வந்தான்?’ - புதிய ஆய்வு

மனிதன் தோன்றியது எங்கு, எப்படி என்பதை மிகவும் புதிய ஒரு கண்ணோட்டத்தில் ஆய்வு நடந்துள்ளது.

Update: 2018-07-25 09:44 GMT
மனிதன் எங்கிருந்து வந்தான்? என்று யாரிடமாவது கேட்டால், சற்றும் யோசிக்காமல் ‘குரங்கில் இருந்து’ என்றே பலரும் கூறுவர். ஆனால் நாம் தற்போது வாழ்ந்துகொண்டு இருப்பது கூகுள் காலம். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ள இந்த தகவல் யுகத்தில், மனிதன் எங்கிருந்து வந்தான் என்பது போன்ற அறிவியல் மற்றும் பரிணாமம் சார்ந்த ஆழமான கேள்விகளுக்கு, இனியும், பொதுவான, தகுந்த ஆதாரங்கள் இல்லாத மற்றும் பாரம்பரியமான பதில்களைச் சொன்னால் அது ஏற்புடையதாகவும் இருக்காது, அறிவுப்பூர்வமான ஒரு பதிலாகவும் இருக்காது.

அதுபோலவே, மனித பரிணாமம் என்றாலே, குனிந்த சில குரங்குகளில் இருந்து நிமிர்ந்த உடல்கொண்ட மனிதன் உருவாவது போன்ற ஒரு வரைபடம்தான் நம் கண்களிலும், சிந்தனையிலும் தோன்றும். ஆனால் மனித பரிணாமம் என்பது அவ்வளவு சுலபமான ஒரு மாற்றம் அல்ல என்றும், மாறாக அது மிக மிக சிக்கலான, நமக்கு பாதி கூட தெரியாத ஒரு பரிணாம நிகழ்வு என்கிறது மனித பரிணாமம் தொடர்பான ஒரு சமீபத்திய ஆய்வு.

மனிதன் தோன்றியது எங்கு, எப்படி என்பதை மிகவும் புதிய ஒரு கண்ணோட்டத்தில் ஆய்வு நடந்துள்ளது. இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் பார் த சயன்ஸ் ஆப் ஹியூமன் ஹிஸ்டரி (Max Planck Institute for the Science of Human History) ஆகியவற்றைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் எலீனர் செர்ரி தலைமையிலான ஆய்வுக்குழு இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது.

இந்த ஆய்வின் மூலம் மனித பரிணாமம் தொடர்பான முற்றிலும் புதிய தகவல்களை இந்தக்குழு முன்வைக்கிறது. முக்கியமாக, ஹோமோ சேப்பியன்ஸ் (Homo sapiens) என்று அழைக்கப்படும் நவீன மனித இனத்தைச் சேர்ந்த தற்போதைய மனிதர்கள், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததாக கூறப்படும் ஹோமினிட்ஸ் (Hominids) எனும் பண்டைய மனித இனத்தைச் சேர்ந்த ஹோமோ ஹைடல்பெர்ஜென்சிஸ் (Homo heidelbergensis) வகை மனித இனத்தில் இருந்து தோன்றியிருக்கிறார்கள் என்று முந்தைய ஆய்வுகளில் கூறப்பட்டது. மேலும், அந்த மனித இனமே ஆப்பிரிக்காவின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து மெல்ல மெல்ல வெளியேறி தற்போதைய உலகின் பல பகுதிகளையும் ஆக்கிரமித்து வாழத் தொடங்கியது என்பதுமே இதுவரையிலான புரிதலாக இருந்து வந்துள்ளது.

ஆனால், இதற்கு முந்தைய ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்டது போல, மனித இனம் ஆப்பிரிக்காவில் உள்ள கிழக்கு ஆப்பிரிக்க பகுதியிலோ அல்லது தெற்கு ஆப்பிரிக்க பகுதியிலோ மட்டுமே தோன்றவில்லை என்றும், மாறாக ஆப்பிரிக்க கண்டம் மொத்தத்திலும் பரவி வாழ்ந்திருக்கின்றனர் என்றும் விளக்குகிறது எலீனர் தலைமையிலான இந்த புதிய ஆய்வு.

இந்த புதிய கூற்றுக்கு ஆதாரமாக, கடந்த வருடம் மொராக்கோ நாட்டிலுள்ள ஜெபெல் இர்ஹவ்ட் எனும் குகையில் இருந்து கண்டறியப்பட்ட, குறைந்தது சுமார் 3 லட்சத்து 15 ஆயிரம் வருடங்கள் பழையதாக இருக்கக்கூடிய ஹோமோ சேப்பியன்ஸ் மனித எலும்புகள், ஆப்பிரிக்காவின் வடமேற்கு பகுதியை மனித தோற்றத்தின் பகுதிகளில் ஒன்றாக, முதன்முறையாக இணைத்தது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, தெற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 2 லட்சத்து 60 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய ப்லோரிஸ்பாட் (Florisbad) மனித மண்டை ஓடு, எத்தியோப்பியாவில் உள்ள ஓமோ கிபிஷ் பகுதியில் கண்டறியப்பட்ட ஒரு லட்சத்து 95 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய மனித எலும்புகள் மற்றும் எத்தியோப்பியாவின் மற்றொரு பகுதியில் கண்டறியப்பட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய ஹெர்டோ மண்டை ஓடு ஆகியவை அனைத்தும் நவீன மனிதர்களின் பல பண்புகளைக் கொண்டவையாக இருப்பதும், ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதில் இருந்து ஹோமோ சேப்பியன்ஸ் ஆப்பிரிக்கா கண்டம் மொத்தத்திலும் ஒரே சமயத்தில் வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது என்கிறார் எலீனர்.

ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் வாழ்ந்த மனித இனமானது, தனியாக பரிணாமம் அடைந்தது மட்டுமல்லாமல், நவீன மனிதர்களின் குணங்களில் சில இருந்தும், பல இல்லாமலும் வளர்ந்திருக்க வேண்டும் என்கின்றனர் எலீனர் உள்ளிட்ட பல உலக அகழ்வாராய்ச்சியாளர்கள்.

மிக முக்கியமாக, நில எல்லைகளால் பிரிக்கப்பட்டிருந்த மனித இனத்தின் பல பிரிவுகள், பருவநிலை மாற்றங்கள் காரணமாக ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் சென்றபோது சில சமயங்களில் ஒன்றுடன் ஒன்று கலந்து இனப்பெருக்கம் செய்து, அதன் காரணமாக அவர்களின் மரபணுக்கள் மற்றும் கருத்துகள் ஒன்று கலந்தும், சில சமயங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து சென்றிருக்கவும் வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிரிக்கன் மல்டிரீஜியனிலசம் (African multiregionalism) என்று அழைக்கப்படும் இந்த புதிய கருதுகோளானது, மனித தோற்றமானது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையிலிருந்தோ உருவானது அல்ல என்றும், மாறாக ஆப்பிரிக்க எனும் ஒரு முழுக்கண்டம் முழுக்க பரவி வாழ்ந்தது என்றும் கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில், தற்போதைய மனித இனமானது ஆப்பிரிக்கா கண்டத்தில் வாழ்ந்த, பல ஒற்றுமைகள் கொண்ட, பல்வேறு மனித இனக்குழுக்களின் கலவை என்கிறது இந்த புதிய ஆய்வு. 

மேலும் செய்திகள்