வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் எழுத வேண்டிய தேர்வு

வெளிநாட்டில் மருத்துவம் படிப்பவர்கள், திரும்ப இங்கே வந்து மருத்துவம் செய்ய வேண்டுமெனில் அதற்கு தனியாக ஒரு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

Update: 2018-07-25 09:26 GMT
மருத்துவம் படிக்க இப்போது நீட் தேர்வு அவசியம். வெளிநாட்டில் சென்று மருத்துவம் படிப்பவர்கள், திரும்ப இங்கே வந்து மருத்துவம் செய்ய வேண்டுமெனில் அதற்கு தனியாக ஒரு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். அந்தத் தேர்வு, “பாரின் மெடிக்கல் கிராஜூவேட்ஸ் எக்சாமினேஷன் (FMGE)” எனப்படுகிறது. தேசியத் தேர்வு வாரியம் (நேஷனல் போர்ட் ஆப் எக்சாமினேசன்ஸ்) இந்த தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வை வெளிநாட்டில் மருத்துவம் படித்து திரும்பும் இந்திய குடியுரிமை பெற்ற மருத்துவர்கள் மட்டுமே எழுத முடியும். மருத்துவ தொழில் செய்வதற்கு மட்டுமல்லாது, கல்லூரிகளில் பேராசிரியர், விரிவுரையாளராக பணியில் சேர வேண்டுமானாலும் இந்தத் தேர்வு அவசியமாகும்.

2002-ம் ஆண்டு இந்தத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படுமே தவிர, தேர்வாளர்கள் பெற்ற மதிப்பெண்கள், வெற்றி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஏதும் வெளியிடப்படுவதில்லை. இதுபற்றி எழுந்த குற்றச்சாட்டுகளால் ஆரம்பத்தில் இந்த தேர்வுகளுக்கு எதிர்ப்பு இருந்தன. 2009ல் சுப்ரீம் கோர்ட்டு சில விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆண்டிற்கு இரண்டுமுறை (ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில்) இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

பிற உலக நாடுகளில் இந்திய டாக்டர்கள் பணிபுரிய வேண்டுமானால், உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள எம்.சி.ஐ. ஸ்கிரீனிங் தேர்வு எழுத வேண்டும் என்பது இங்கே நினைவூட்டத்தக்கது. 

மேலும் செய்திகள்