துணை ராணுவ படைகளில் 55 ஆயிரம் பணியிடங்கள்
துணை ராணுவ படைகளில் சுமார் 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி. அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) மத்திய அரசுப் பணி தேர்வாணையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த அமைப்பு தற்போது துணை ராணுவ படைப்பிரிவுகளில் கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி ) பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது.
நமது நாட்டின் உள்விவகார பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக துணை ராணுவ அமைப்புகள் செயல்படுகின்றன. எல்லைக் காவல் படை (பி.எஸ்.எப்.), தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.), மத்திய ஆயுதப்படை (சி.ஆர்.பி.எப்.), சசாஸ்திரா சீமா பல் (எஸ்.எஸ்.பி.), இந்திய திபெத்திய எல்லைக் காவல் படை (ஐ.டி.பி.பீ.), அசாம் ரைபிள் போன்ற படைப்பிரிவுகள் துணை ராணுவத்தில் அடங்கும். தற்போது இந்த படைப்பிரிவில் ஆண்களுக்கு 47 ஆயிரத்து 307 இடங்களும், பெண்களுக்கு 7 ஆயிரத்து 646 இடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 54 ஆயிரத்து 953 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஒவ்வொரு படைப்பிரிவு வாரியான மற்றும் இட ஒதுக்கீடு வாரியான பணியிடங்கள் விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
விண்ணப்பதாரர்கள் 1-8-2018 தேதியில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1995 மற்றும் 1-8-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
மெட்ரிக்குலேசன் தேர்ச்சி பெற்றவர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். குறிப்பிட்ட உடல்தகுதி பரிசோதிக்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் இைணயதளம் வழியே விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். 20-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் www.ssc.nic.in மற்றும் www.ssconline.nic.in ஆகிய இணையதள பக்கங்களை பார்க்கலாம்.