புற்றுநோய் பாதிப்பு
மார்பகப் புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். காலதாமதமாக திருமணம் செய்வது, குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவே, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ந் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் புற்றுநோய் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றுவதே இதன் கருப்பொருளாகும். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம்.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இவர்களில் 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 5.5 லட்சம் பேர் பெண்கள். பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சம் பேர் இறக்கின்றனர். புற்றுநோயால் குறிப்பாக மார்பகப் புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு வாழ்க்கை முறை மாற்றமே முக்கிய காரணம்.
காலதாமதமாக திருமணம் செய்வது, திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது போன்றவை இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மார்பகப் பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதே போல ஆண்கள் தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு புகை பிடிப்பதே முக்கிய காரணமாக உள்ளது. தொண்டை புற்றுநோய் வருவதற்கு முன்பு குரலில் மாற்றம் ஏற்படும்.
புற்றுநோய் சிகிச்சையின்போது ஏற்படும் மிக கடுமையான பக்க விளைவுகளில் ஒன்று தலைமுடி இழப்பு. புற்றுநோய் சிகிச்சையில் வலியை விடவும், தலைமுடி இழப்பு என்பது மோசமானதாக உள்ளது. இது, புற்றுநோயாளிகளிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே, புற்றுநோயாளிகளுக்கு ‘விக்‘குகளை தயாரித்து வழங்குவதற்காக ‘டேங்கில்ட்‘ என்ற விழிப்புணர்வு மற்றும் தலைமுடி தான இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
முடி தான இயக்கத்தில் 50-க்கும் அதிகமான மாணவிகள் பங்கேற்று தங்கள் தலை முடியை தானமாக அளிக்கின்றனர். புற்றுநோயாளிகளுக்காக தலையை மொட்டையடித்துக் கொள்ளும் கல்லூரி மாணவிகளின் தொண்டுள்ளம் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது.