கவர்னர் நடவடிக்கையால் குவைத் நாட்டில் சிக்கி தவித்த பெண் மீட்பு

குவைத் நாட்டில் சிக்கி தவித்த புதுவை மாநில பெண் கவர்னர் கிரண்பெடி நடவடிக்கையில் மீட்கப்பட்டார்.

Update: 2018-07-25 00:15 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மீனா(வயது 44). இவர் வீட்டு வேலை செய்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் குவைத் நாட்டிற்கு சென்றார். அங்கு வேலைப்பளு அதிகமாக கொடுக்கப்பட்டது. போதுமான உணவும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவதி அடைந்த அவர் இந்தியா திரும்ப முயற்சி செய்தார். ஆனால் அவரை அழைத்து சென்றவர்கள் ரூ.1½ லட்சம் பணம் கொடுத்தால் தான் இந்தியாவிற்கு அனுப்ப இயலும் என்று கூறினர். இதனால் அவர் இந்தியா திரும்ப முடியாமல் குவைத் நாட்டில் சிக்கித்தவித்தார்.

இந்த நிலையில் புதுவை இந்திராகாந்தி அரசு கல்லூரியில் படித்துவரும் அவரது மகன் புரட்சிதாசன் (23) இது குறித்து கவர்னர் கிரண்பெடியிடம் புகார் செய்தார். மேலும் குவைத்தில் சிக்கி தவிக்கும் தனது தாயாரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி உடனடியாக இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். மேலும் மீனாவை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து அவரது நடவடிக்கையின் பேரில் குவைத் நாட்டில் சிக்கி தவித்த மீனா மீட்கப்பட்டார். பின்னர் அவர் புதுச்சேரி வந்து சேர்ந்தார்.

இந்த நிலையில் மீனா அவரது மகன் புரட்சிதாசன் மற்றும் குடும்பத்தினர் நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் குவைத்தில் இருந்து இந்தியா திரும்பி வருவதற்கு நடவடிக்கை எடுத்து உதவி செய்த கவர்னருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்