தெலுங்கானாவுக்கு கடத்தப்பட்ட திண்டுக்கல் வியாபாரி மீட்பு

தெலுங்கானாவுக்கு கடத்தப்பட்ட திண்டுக்கல் வியாபாரியை, கிராமத்துக்குள் தனிப்படை போலீசார் அதிரடியாக நுழைந்து மீட்டனர்.;

Update: 2018-07-24 23:00 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 40). வியாபாரி. இவரை, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் தெலுங்கானா மாநிலம் வாராங்கால் பகுதிக்கு கடத்தி சென்றனர். இதுகுறித்து அவருடைய தம்பி பிரேம்குமார் (35) திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில் தெலுங்கானா மாநிலம் வாராங்கால் பகுதியை சேர்ந்த கொம்மல் ரெட்டி தரப்பினர், குணசேகரனை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார், குணசேகரனை மீட்பதற்காக தெலுங்கானாவுக்கு விரைந்தனர். ஒரு வாரமாக அங்கு முகாமிட்டு குணசேகரனை போலீசார் தேடி வந்தனர்.

இதனை அறிந்த கொம்மல் ரெட்டி தரப்பினர், குணசேகரனை ஒரே இடத்தில் வைக்காமல் வெவ்வேறு பகுதிகளில் உள்ள, உறவினர்களின் வீடுகளில் மறைத்து வைத்திருந்தனர். மலைக்கிராமங்களான அந்த பகுதி நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதி ஆகும். மேலும் உள்ளூர் பொதுமக்கள் திண்டுக்கல் போலீசாரை ஊருக்குள் விடாமல் தடுத்து வந்தனர். இதையடுத்து தெலுங்கானா போலீசாரின் உதவியுடன், திண்டுக்கல் போலீசார் அந்த கிராமத்துக்குள் அதிரடியாக நுழைந்து குணசேகரனை மீட்டனர்.

போலீசார் வருவதை அறிந்த கொம்மல் ரெட்டி தரப்பினர் தப்பிச்சென்றுவிட்டனர். இதையடுத்து குணசேகரனை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்த போலீசார், அவரை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். வியாபாரியை மீட்ட தனிப்படை போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

மேலும் செய்திகள்