ஜப்தி செய்ய வருவதை அறிந்ததும் தனி தாசில்தார் அலுவலகத்தை பூட்டிச் சென்ற அதிகாரிகள்
நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்காததால் பழனியில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பொருட்களை கோர்ட்டு ஊழியர் ஜப்தி செய்ய வந்தார். இதை அறிந்ததும் வழக்கமான நேரத்துக்கு முன்பாகவே அலுவலகத்தை பூட்டிவிட்டு அதிகாரிகள் சென்றுவிட்டனர்.;
பழனி,
பழனி தாலுகா தொப்பம்பட்டி அருகே உள்ள ஆலாவலசையை சேர்ந்தவர் கந்தசாமி கவுண்டர். இவரது மகன் பெரியகருப்புச்சாமி. தொப்பம்பட்டி கிராமத்தில் இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் 20 சென்ட் நிலத்தை ஆதிதிராவிட நலத்துறையினர் இலவச பட்டா வழங்குவதற்காக கடந்த 1994–ம் ஆண்டு கையகப்படுத்தினர். அப்போது இந்நிலத்திற்கு இழப்பீடாக ரூ.11 ஆயிரத்து 148 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நில உரிமையாளர் பெரியகருப்புச்சாமி, தொகை குறைவாக இருப்பதாக தெரிவித்து பழனி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் போது நில உரிமையாளர் தரப்பில் நிலத்திற்கு ரூ.1லட்சத்து 20 ஆயிரம் வழங்கும்படி கேட்கப்பட்டது. ஆனால் சார்பு நீதிமன்றத்தில் 21.12.2009–ல் நிலத்திற்கான இழப்பீடு தொகை ரூ.72 ஆயிரத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 112 வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் எவ்வித இழப்பீடும் நில உரிமையாளருக்கு வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த பழனி சார்பு நீதிமன்ற நீதிபதி கணேசன், பழனி ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள 2 கம்ப்யூட்டர், 5 மர பீரோ, 5 இரும்பு பீரோ, 10 மேஜை, 10 நாற்காலி மற்றும் 10 மின் விசிறிகள் ஆகிய பொருட்களை ஜப்தி செய்ய கடந்த 12–ந் தேதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கோர்ட்டு ஊழியர், பழனி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிட நலத்துறையின் தனி தாசில்தார் அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு வந்தார்.
ஆனால் இதை அறிந்து, வழக்கமான நேரத்துக்கு முன்பாகவே அலுவலகத்தை பூட்டி விட்டு அதிகாரிகளும், ஊழியர்களும் சென்றுவிட்டனர். எனவே ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.