உளுந்தூர்பேட்டை பகுதியில் செம்மண் கடத்தலை தடுக்க வேண்டும், கலெக்டரிடம் 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் மனு
உளுந்தூர்பேட்டை பகுதியில் செம்மண் கடத்தலை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பச்சைவெளி, நைனார்குப்பம், ஆரியநத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எங்கள் 3 கிராம மக்களுக்கும் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். கடந்த 3 மாதங்களாக பச்சைவெளி பகுதியில் சிலர் இரவு நேரத்தில் போலி பதிவெண் கொண்ட லாரி உள்ளிட்ட வாகனங்களில் செம்மண், கூழாங்கற்கள் அள்ளி கடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் விவசாய நிலங்களிலும் மண் அள்ளி கடத்துகின்றனர்.
அவ்வாறு மண் கடத்தி செல்பவர்கள் குடிபோதையில் கிராமத்தின் வழியாக வாகனங்களில் அதிவேகமாக செல்வதால், பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதை தட்டிக்கேட்டால், எங்களை மிரட்டுகின்றனர்.
இந்நிலையில் 10 அடிக்கும் மேல் பள்ளம் தோண்டி செம்மண் எடுப்பதால், எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கிணறுகளிலும் தண்ணீர் வற்றி வருகிறது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் அல்லல்படும் நிலை உள்ளது. எனவே 3 கிராம பகுதிகளிலும் நடக்கும் மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.