சேலத்தில் வாலிபர் வெட்டிக்கொலை - 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

சேலத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-07-24 22:45 GMT
சேலம்,

சேலத்தில் வாலிபர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் அஸ்தம்பட்டி ராம்நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு தகர கூடாரத்தில் மாநகராட்சி குப்பை வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த கூடாரத்துக்கு நேற்று இரவு 7 மணிக்கு சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் விஜய் (வயது 28) உள்பட 5 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு அமர்ந்து ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.

அப்போது பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக விஜய்க்கும், மற்ற 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து, விஜய்யை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் தலை, கழுத்து பகுதிகளில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானார்.

இதைத்தொடர்ந்து 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் விஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். வெட்டிக்கொலை செய்யப்பட்ட விஜய் மீது அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி போலீஸ் நிலையங்களில் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, விஜய் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம் நேற்று இரவு சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்