வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை முட்புதரில் பிணம் வீச்சு

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த கும்பல், அவரது உடலை முட்புதரில் வீசிச்சென்றுள்ளது.

Update: 2018-07-24 22:30 GMT
திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இருந்து பஞ்சப்பூர் செல்லும் வழியில் மதுரை பைபாஸ் சாலை சந்திப்பில் பசுமைப்பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு எதிரே சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது. இங்கு நேற்று காலை 9 மணிக்கு அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார். பைபாஸ் சாலையில் இருந்து 200 அடி தூரத்துக்குள் சென்ற முதியவர், அங்கு முட்புதரில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடலில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபனுக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து பார்வையிட்டு உடனடியாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா, உதவி போலீஸ் கமிஷனர் சிகாமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உதயச்சந்திரன்(எடமலைப்பட்டி புதூர்), விஜயபாஸ்கர்(கண்டோன்மெண்ட்) மற்றும் போலீசார் ஜீப்பில் விரைந்தனர். அங்கு கொலையுண்டு கிடந்த வாலிபர் உடலை பார்வையிட்டனர். அவரது உடலில் வயிறு, மார்பு, முகத்தில் இடது பகுதி, கழுத்து உள்ளிட்ட 6 இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன.

வாலிபர் கொலையுண்ட இடத்தில் ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது. எனவே, நேற்று முன்தினம் இரவே கொலையாளிகள் அந்த வாலிபரை கடத்தி சென்று கொலை செய்து பிணத்தை முட்புதரில் வீசி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். நண்பர்கள் சிலர் அவரை மது அருந்த அழைத்து சென்று, அப்போது ஏற்பட்ட பிரச்சினையால் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும், பெண் பிரச்சினையால் வெட்டி கொன்றிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

அவரது கழுத்தில் புலிநகம் போன்ற கருப்பு பாசி கிடந்தது. இடது கையில் பச்சைகுத்தப்பட்ட பெயர் ஏற்கனவே அழிக்கப்பட்ட அடையாளமும் காணப்பட்டது. கொலை செய்யப்பட்டவர் குறித்து எவ்வித தகவலும் தெரியாததால், அவரை அடையாளம் காணும் வகையில் எடமலைப்பட்டி புதூரில் வசிக்கும் சிலரை போலீசார் அழைத்து அடையாளம் காணச்செய்தனர். ஆனால், யாராலும் அடையாளம் காணமுடியவில்லை.

செப்டிக் டேங்க் கிளனிங் லாரியில் பார்த்தது போல தெரிவதாகவும், செங்குளம் காலனியை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், இறைச்சிக்கடையில் வேலை பார்த்த நபர்போல இருக்கிறார் என ஒவ்வொருவரும் ஒரு கருத்தை தெரிவித்தனர். ஆனால், அவரது பெயர், முகவரி தெரியவில்லை. போலீசார் கொலையுண்டவர் முகத்தை செல்போனில் பதிவு செய்து, அவர் மாயமானதாக போலீஸ் நிலையங்களில் புகார் ஆகி உள்ளதா? என விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரிந்த பின்னரே கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் தெரியவரும்.

கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல், திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்