வளசரவாக்கத்தில் வீடுகளுக்குள் புகுந்து மடிக்கணினிகள் திருடிய வாலிபர் கைது

வளசரவாக்கத்தில் வீடுகளுக்குள் புகுந்து மடிக்கணினிகள் திருடியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார். மடிக்கணினியை வாங்கி விற்றவரும் சிக்கினார்.

Update: 2018-07-24 23:15 GMT
பூந்தமல்லி,

வளசரவாக்கம், ராயலா நகர் பகுதிகளில் உள்ள சில வீடுகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் அதிக அளவில் தங்கி உள்ளனர். இங்கு அடிக்கடி மடிக்கணினிகள் திருட்டுப்போவதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதனையடுத்து துணை கமிஷனர் அரவிந்தன் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் சம்பத், ராயலா நகர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை வைத்து விசாரணை செய்து வந்தனர்.

அப்போது தண்டையார்பேட்டை வ.உ.சி. தெருவை சேர்ந்த பாலாஜி (வயது 29) என்பவர், வீடுகளுக்குள் புகுந்து மடிக்கணினிகளை திருடியது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. பாலாஜியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாணவர்கள் மற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் வீடுகளின் சாவியை தங்கள் வீடுகளில் மறைவான ஒரு இடத்தில் வைத்துவிட்டு செல்வது வழக்கம். இந்த இடங்களை கண்டறிந்து அந்த சாவியை எடுத்து வீடுகளின் பூட்டை திறந்து அதில் உள்ள மடிக்கணினிகளை அவர் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து 30 மடிக்கணினிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் திருடப்பட்ட மடிக்கணினிகளை வாங்கி விற்பனை செய்ததாக பர்மா பஜாரை சேர்ந்த இம்ரான்ரசாக் (21) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்