லாரிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை

லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2018-07-24 22:30 GMT

ஈரோடு,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

லாரி உரிமையாளர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அனைத்து பகுதிகளிலும் சரக்குகள் தேங்கி கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. லாரிகள் சரக்குகளுடன் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. பல தொழிற்சாலைகளில் உற்பத்தி முடங்கி இருப்பதால், தொழிலாளர்கள் வேலை இழந்து வருகிறார்கள்.

நாமக்கல் பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு முட்டைகள் கொண்டு செல்ல முடியாததால் பண்ணையிலேயே அவை தேங்கிக்கிடக்கின்றன. விவசாய விளை பொருட்களுக்கு ஏற்கனவே உரிய விலை கிடைப்பதில்லை. தற்போது விளைவித்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே வீணாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

அதே நேரம் சந்தையில் காய்கறிகள், பழங்கள் விலை உயரத்தொடங்கி உள்ளன. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

லாரி உரிமையாளர்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள். லாரி தொழிலை நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் கோரிக்கைகளை மத்திய–மாநில அரசுகள் கண்டுகொள்வதே இல்லை. ஏற்கனவே லாரி தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. எனவே லாரி தொழிலையும், அதை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களையும் பாதுகாக்கும் வகையில் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய– மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்