பெங்களூருவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி விற்ற 4 பேர் கைது

பெங்களூருவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-24 23:30 GMT

கோவை,

பெங்களூருவில் இருந்து போதை ஊசிகள் மற்றும் மருந்துகளை கோவைக்கு கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு சிலர் விற்பனை செய்வதாக கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யாவுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாநகர சட்டம்–ஒழுங்கு துணை கமி‌ஷனர் லட்சுமிக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் கோவை வந்து கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை ஊசிகளை விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 23–ந் தேதி கோவையை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 24), மகேந்திரன் (27), அஜய் (24), ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த ஜாய் இம்மானுவேல் (28) இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதும், அவர்தான் அங்கிருந்து கோவைக்கு போதை ஊசிகள் மற்றும் மருந்துகளை அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.

அத்துடன் அதற்கு துணையாக கோவையை சேர்ந்த சிலர் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் அனைவரையும் தேடி வந்தனர். அத்துடன் ஜாய் இம்மானுவேலின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் கண்காணித்து வந்ததுடன் அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவரின் செல்போன் எண் கோவை காந்திபுரம் பகுதியில் இருப்பதாக சிக்னல் காட்டியது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் கோவை காந்திபுரம் 2–வது வீதி சத்தி ரோடு சந்திப்பு பகுதியில் ரோந்து வந்தபோது அங்கு ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக கையில் பையுடன் நின்றிருந்தார்.

உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் ஜாய் இம்மானுவேல் என்பதும், போதை ஊசிகளை விற்பனை செய்யும் கும்பலின் தலைவன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ஏராளமான போதை ஊசிகள் இருந்தன. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், கோவை உக்கடத்தை சேர்ந்த முகமது சிஹாப் (22), ஜூல்பிகார் அலி (24), முகமது அனாஸ் (24) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போதை ஊசிகள் மற்றும் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் போலீசார் ஜாய் இம்மானுவேல் உள்பட 4 பேரையும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்த னர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:–

ஜாய் இம்மானுவேல் தலைமையில் செயல்பட்ட கும்பல், பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் மயக்க மருந்துகளை திருடி, அதை குளுக்கோசில் கலந்து போதை ஊசிகளை தயாரித்து உள்ளனர். பின்னர் அவற்றை கோவை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஒரு ஊசியை ரூ.300–ல் இருந்து ரூ.1000 வரை விற்பனை செய்து உள்ளனர்.

குறிப்பாக வசதியான கல்லூரி மாணவர்களைதான் அவர்கள் குறி வைத்து உள்ளனர். மேலும் சில மாணவர்களுக்கு இந்த கும்பலை சேர்ந்தவர்கள் பண ஆசைகாட்டி போதை ஊசிகளை விற்பனை செய்யவும் தூண்டி உள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்