கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் உரிமத்தை ரத்து செய்யலாம்: தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2018-07-24 22:45 GMT

மதுரை,

ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜூ, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வித்திட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க அவர்களது பெற்றோர்களிடம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது என்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது. மேலும், இத்திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் தவிர புத்தகம், சீருடை உள்ளிட்ட இதர செலவினங்களை பெற்றோர்கள் செய்ய வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இதனால் ஏழை குடும்பத்தினர் கடன் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. கட்டாயமாக கட்டணம் வசூலிப்பது இலவச கட்டாய கல்வித்திட்டத்திற்கு எதிரானது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

எனவே இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தாத பள்ளிகள் குறித்து ஆய்வு செய்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷாபானு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெறுவதை அரசு உறுதி செய்வது அவசியம். முறைகேடுகள் நடக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம்’’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்