தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு பா.ஜ.க. அரசு காரணம் அல்ல - எச்.ராஜா பேட்டி

தமிழத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு பா.ஜ.க. அரசு காரணம் அல்ல என்று பரமக்குடியில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

Update: 2018-07-24 23:00 GMT

பரமக்குடி,

பரமக்குடியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா வந்திருந்தார். பின்பு அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து கோவில் டிரஸ்டிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:– மேட்டூர் அணை தற்போது நிரம்பி விட்டது. ஆனால் தமிழக அரசு சென்னை வீராணம் ஏரி உள்பட எந்த ஏரிகளையும், கண்மாய்களையும் தூர்வாராமல் உள்ளது. காவிரி ஆற்றுப்படுகையில் புதர்கள் மண்டிப்போய் கிடக்கிறது. அவை முறையாக பராமரிக்கப்படவில்லை. மத்திய அரசு 100 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைத்துள்ளது.

இதன் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள். மேலும் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டில் ஜி.எஸ்.டி. வரியின் காரணமாக வரி ஏய்ப்பு செய்வது குறைந்துள்ளது. கடந்த 2017–ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 6 மாதத்திற்குள் ரூ.4,300 கோடி ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு வரி வசூல் வந்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு மத்திய அரசோ, பா.ஜ.க.வோ காரணம் அல்ல. உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் பேரில் தான் வருமான வரிச்சோதனை நடைபெறுகிறது.

பண மதிப்பிழப்பிற்கு பிறகு முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் தான் வருமான வரிச்சோதனை நடக்கிறது. மத்தியில் ஏற்கனவே காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் இன்னும் குறைந்த வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. முறையான வாடகை வசூலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில துணை தலைவர்கள் சுப.நாகராஜன், குப்புராமு, மாநில செயலாளர் பொன்.பாலகணபதி, கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்