காவிரியில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிப்பு: மாயனூர் கதவணை பூங்கா மூடல்

காவிரியில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரித்துள்ளதால் மாயனூர் கதவணை பூங்கா மூடப்பட்டது. மேலும் கரையோரம் நின்று ‘செல்பி‘ எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் அறிவுறுத்தினார்.

Update: 2018-07-24 22:45 GMT
கிருஷ்ணராயபுரம்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கர்நாடக அணைகள் நிரம்பியதை அடுத்து திறந்து விடப்பட்ட உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்து 100 அடியை தாண்டியது. இதனையடுத்து கடந்த 19-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட்டார். தொடர்ந்து அணைக்கு வந்த அதிகப்படியான நீரால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு அது கடந்த 21-ந் தேதி அன்று மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் கதவணைக்கு வந்த நீர் அப்படியே டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்ததால் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து அணையிலிருந்து அதிகப்படியான நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து காவிரி ஆறு கடந்து வரும் மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும், பல்வேறு முன்னேற்பாடுகளும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் இந்த ஏற்பாடுகளை நேற்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் நொய்யல் அணைக்கட்டு, புஞ்சைபுகழூர் வடக்குகட்டி பாளையம், நஞ்சைபுகழூர், மேற்கு தவிட்டுபாளையம், மாயனூர் கதவணை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் கதவணை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள சிறுவர் பூங்கா பகுதியில் தான் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது வழக்கம். அதிகப்படியான நீர் வருவதால் இந்த பகுதியில் ஆற்றில் இறங்கும் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுப்பணித்துறையினர் பூங்காவை தற்காலிகமாக பூட்டி வைத்து உள்ளனர். மேலும் எச்சரிக்கை ரிப்பன் கட்டப்பட்டுள்ளது.

மாயனூர் கதவணையில் மாவட்ட கலெக்டர் அன்பழகன், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அணைக்கு வரும் நீர், வெளியேற்றப்படும் நீர், அணையின் செயல்பாடுகள், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த அளவு அதிகரித்து கொண்டே வருவதையொட்டி கரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறை, காவல் துறை, வளர்ச்சித்துறை இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நேற்று முதல் 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருவது தொடர்ந்து 60 ஆயிரம் கனஅடியில் இருந்து 70 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

தற்போது மாயனூர் கதவணையில் இருந்து சுமார் 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டும், ஆயிரம் கனஅடி நீர் பாசன வாய்க்கால்களில் திறந்து விடப்பட்டும் உள்ளது. காவிரி கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றாலும், பொதுமக்கள் தங்களது குழந்தைகளையும், கால்நடைகளையும் அதிக கவனத்துடன் கண்காணித்து பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும் ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம். மேலும் ஆற்று கரைகளில் இருந்து செல்பி, புகைப்படம் எடுத்தல் போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். விவரங்களுக்கு தேவைப்படும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் பொதுமக்கள் தகவலை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கோட்டாட்சியர்கள் கரூர் சரவணமூர்த்தி, குளித்தலை லியாக்கத், தாசில்தார்கள் கிருஷ்ணராயபுரம் சுரேஷ்குமார், மண்மங்கலம் கற்பகம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், பொறியாளர் கார்த்திக், மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்