ரஷிய பெண் பாலியல் பலாத்கார வழக்கு: கைதான 4 பேர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ரஷிய பெண் பாலியல் பலாத்கார வழக்கில் விரைவில் தீர்ப்பை எதிர்பார்ப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Update: 2018-07-24 23:30 GMT
திருவண்ணாமலை,

ரஷிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 4 பேர் மீது குற்றப்பத்திரிகையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ரஷிய நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் செங்கம் சாலை கஸ்தூரி நகரில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சுயநினைவின்றி மயக்க நிலையில் இருந்தார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கிருந்த அவரை போலீசார் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து ரஷிய பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அபார்ட்மெண்ட் உரிமையாளரான வேடநத்தம் பகுதியை சேர்ந்த பாரதி, அவரது அண்ணன் நீலகண்டன், திருவண்ணாமலை செங்கம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன், பாவாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த ரஷிய பெண் பூரண குணமடைந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

மேலும் சட்ட ரீதியான விசாரணைக்காக சில நாட்கள் இங்கு தங்க வேண்டிய நிலை உள்ளதால் அவர் போலீஸ் பாதுகாப்புடன் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், வேலூர் மத்திய சிறையில் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் அடையாள அணிவகுப்பு நடந்தது. அப்போது குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்காக பாதிக்கப்பட்ட ரஷிய பெண்ணை திருவண்ணாமலை ஆசிரமத்திலிருந்து போலீசார் வேலூர் மத்திய ஜெயிலுக்கு அழைத்து வந்தனர். இங்கு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருடன் மற்ற கைதிகளும் நிற்க வைக்கப்பட்டு அடையாள அணிவகுப்பு நடந்தது.

அப்போது தன்னை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை அவர் சரியாக அடையாளம் காண்பித்து உள்ளார். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணியில் போலீசார் இறங்கினர்.

நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் திருவண்ணாமலை கோர்ட்டு வளாகத்தில் உள்ள ஜே.எம்.1 கோர்ட்டுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வந்தார். அவருடன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், வழக்கு விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் வந்தனர். இதையடுத்து மாஜிஸ்திரேட்டு விக்னேஷ் பிரபுவிடம் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதில் சுமார் 16 பக்கம் உள்ள குற்றப்பத்திரிகையும், ஆவணங்களும் தாக்கல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலாத்காரம் செய்தல், மானபங்கம் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரத்தில் மாஜிஸ்திரேட்டிடம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பின்னர் இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறும். பாதிக்கப்பட்ட ரஷிய பெண்ணிற்கு வருகிற ஆகஸ்டு 8-ந் தேதி வரை சுற்றுலா விசா உள்ளது. நீதிமன்ற விசாரணையில் அவர் சாட்சியம் கொடுத்த பிறகு ரஷியா செல்வார். இந்த வழக்கு தொடர்பாக விரைவில் தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்