திருவண்ணாமலை மாவட்டம்: லாரிகள் வேலைநிறுத்தத்தால் தினமும் ரூ.5 கோடி வரை வர்த்தகம் பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தத்தால் தினமும் ரூ.5 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Update: 2018-07-24 23:15 GMT
திருவண்ணாமலை,

பெட்ரோல், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வர வேண்டும். நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த 20-ந் தேதி முதல் லாரிகள் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இந்த லாரிகள் மணலூர்பேட்டை சாலை, அவலூர்பேட்டை சாலை போன்ற இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த போராட்டத்தினால் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் விற்பனை 50 சதவீதம் வரை குறைந்து விட்டதாக பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்த வேலைநிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடிக்கு மேல் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அரசு பஸ்களில் கொண்டு செல்லலாம் என்று அரசு அறிவித்து உள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை மார்க்கெட்டிற்கும், உழவர் சந்தைக்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். லாரிகள் வேலை நிறுத்தம் நடந்தாலும் நேற்று வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்கறி விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்