ஏரி, குளம், வாய்க்கால் தூர்வாரும் பணிக்கு தங்களை பயன்படுத்த கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஏரி, குளம், தூர்வாரும் பணிக்கு தங்களை பயன்படுத்தக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-07-24 22:45 GMT
திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) வேலை செய்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண் தொழிலாளர்கள் திரண்டு வந்து இருந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணியன், தங்கதுரை ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர் உள்பட நிர்வாகிகள் பலர் பேசினார்கள்.

தமிழக அரசு 100 நாள் வேலை திட்டத்தை முடக்க கூடாது, 100 நாள் வேலை திட்டத்தில் கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் காண்டிராக்ட் அனுமதித்து சீர் குலைக்க கூடாது, 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஏரி, குளம், வாய்க்கால் தூர்வாரும் பணி வழங்குவதில் முன்னுரிமை தரவேண்டும். 15 நாட்களில் வேலைக்கான ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும், காலதாமதமான ஊதியத்தை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வட்டியுடன் வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பேசிய சங்க நிர்வாகிகள் மத்திய அரசு ஊரக வேலை உறுதி திட்டத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் வரை வழங்கிய ரூ. ஆயிரத்து 278 கோடி நிதியை தொழிலாளர்களுக்கு வேலை வழங்க பயன்படுத்த வேண்டும், இந்த திட்டத்தை முடக்க எடுக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என குறிப்பிட்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் தெய்வநிதி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்