பெரம்பலூர் அருகே மரத்தில் வேன் மோதி தாய், மகன்கள் உள்பட 4 பேர் பலி

பெரம்பலூர் அருகே கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது மரத்தில் வேன் மோதியதில் தாய், மகன்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.

Update: 2018-07-24 23:00 GMT

பெரம்பலூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் சாத்தனார் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 58). கார் மெக்கானிக். இவரது மனைவி சுகுணா (46). மகள்கள் காயத்ரி (28) யோகதர்ஷினி (21). சுகுணாவின் தாய் ஜெயரத்தினம் (73), சகோதரர்கள் ராஜா (53), முருகன் (48), உறவினர்கள் ஈரோட்டை சேர்ந்த நடராஜன் (62), மனோஜ்குமார் (20) ஆகிய 8 பேரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட ஒரு ஆம்னி வேனில் புறப்பட்டு சென்றனர்.

பின்னர் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு பெரம்பலூர் வழியாக ஆத்தூருக்கு திரும்பி சென்றனர். வேனை மனோஜ்குமார் ஓட்டினார். இவர்களுடன் கருப்பையா வரவில்லை. அவர் ஆத்தூரிலேயே இருந்தார்.

அந்த வேன் பெரம்பலூர் அருகே உள்ள எசனை காட்டு மாரியம்மன் கோவில் அருகே நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது மனோஜ்குமார் தூக்க கலக்கத்தில் இருந்ததால் எதிர்பாராதவிதமாக வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் வேனில் இருந்த ராஜா, முருகன், ஜெயரத்தினம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் காயத்ரி, யோகதர்ஷினி, சுகுணா, நடராஜன், மனோஜ்குமார் ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் போலீசார் மற்றும் விபத்து மீட்பு படையினர் விரைந்து வந்து படுகாயமடைந்த காயத்ரி உள்பட 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்