திருவேங்கடம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி சாவு ஆழப்படுத்தியதை எட்டிப் பார்த்தபோது பரிதாபம்

திருவேங்கடம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-07-24 22:00 GMT

திருவேங்கடம், 

திருவேங்கடம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

விவசாயி

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் அருகே உள்ள கரட்டுமலை ஊரைச் சேர்ந்தவர் சண்முகையா (வயது 42), விவசாயி. அவரது வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு பழைய கிணறு உள்ளது. அதனை ஆழப்படுத்தும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன.

பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று காலை சண்முகையா தோட்டத்துக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார். அங்கு கிணறு நன்றாக ஆழப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை பார்ப்பதற்காக தடுப்புச் சுவரின் மீது ஏறி நின்று கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்தார்.

பரிதாப சாவு

கிணற்றுக்குள் தண்ணீர் இல்லாததால் சண்முகையா படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி பேச்சியம்மாள் (38) ஓடிச் சென்று பார்த்துள்ளார். அங்கு கிணற்றுக்குள் படுகாயங்களுடன் அவர் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சண்முகையாவை கிணற்றுக்குள் இருந்து வெளியே மீட்டு கொண்டு வந்தனர். பின்னர் அவரை கழுகுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, சண்முகையா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்ததும் குருவிகுளம் போலீசார், சண்முகையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சண்முகையாவுக்கு சத்யா (21), முத்துலட்சுமி (16) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து குருவிகுளம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அருள்மொழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கிணறு ஆழப்படுத்தியதை எட்டிப் பார்த்த போது தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்