தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா: 3 இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைப்பு போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவையொட்டி 3 இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தெரிவித்தார்.;

Update: 2018-07-24 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவையொட்டி 3 இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தெரிவித்தார்.

பனிமயமாதா ஆலய திருவிழா 

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

கூட்டத்தில் பனிமயமாதா பேராலய அதிபர் மற்றும் பங்குதந்தை லெரின் டிரோஸ், தூத்துக்குடி மறை வட்ட முதன்மை குரு ரோலிங்டன், பாதிரியார்கள் விக்டர் லோபோ, லொயோலா, அந்தோணி பிச்சை மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா நிருபர்களிடம் கூறியதாவது:–

புறக்காவல் நிலையம் 

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா நாளை(வியாழக்கிழமை) தொடங்கி, ஆகஸ்ட் 6–ந் தேதி வரை நடக்கிறது. இது தொடர்பாக போலீஸ் மற்றும் பங்குதந்தைகள், முக்கிய பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. விழா பாதுகாப்பு, போக்குவரத்து, வாகனம் நிறுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி உள்ளோம். பங்கு தந்தைகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அந்த கருத்துக்களையும் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

விழாவையொட்டி தீயணைப்பு நிலையம், ஆலய வளாகம், ஜார்ஜ் ரோடு ஆகிய 3 இடங்களில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த புறக்காவல் நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். இதில் புகார் பெட்டி மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கான தகவல் பெட்டியும் வைக்கப்படும். அதில் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அடிப்படையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஏதேனும் சம்பவங்கள் நடந்தால் புறக்காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 60 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். அதே போன்று போதுமான அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்