சங்கரன்கோவிலில் 27–ந்தேதி ஆடித்தவசு: கோமதி அம்பாள் பூம்பல்லக்கில் வீதிஉலா இன்று தேரோட்டம் நடக்கிறது

சங்கரன்கோவிலில் ஆடித்தவசு திருவிழாவை முன்னிட்டு கோமதி அம்பாள் பூம்பல்லக்கில் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இன்று தேரோட்டம் நடக்கிறது.

Update: 2018-07-24 21:30 GMT
சங்கரன்கோவில், 

சங்கரன்கோவிலில் ஆடித்தவசு திருவிழாவை முன்னிட்டு கோமதி அம்பாள் பூம்பல்லக்கில் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இன்று தேரோட்டம் நடக்கிறது.

பூம்பல்லக்கில் வீதிஉலா 

தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சைவ–வைணவ திருத்தலங்களில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று. உலகத்தின் உயிர்களாகிய நாம் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று வேறுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தவசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா ஒவ்வொரு ஆடி மாதம் தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி–அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இத்தகைய சிறப்புமிக்க ஆடித்தவசு திருவிழா கடந்த 17–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7–ம் திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கோமதி அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று தேரோட்டம் 

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் நடக்கிறது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோமதி அம்பாள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பிறகு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது.

சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முதல் காட்சி மாலை 5 மணிக்கும், இரண்டாம் காட்சி இரவு 9 மணிக்கும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்