தூத்துக்குடியில் கருணாநிதி 95–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.ராசா பங்கேற்பு
தூத்துக்குடியில் கருணாநிதியின் 95–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.ராசா கலந்து கொண்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கருணாநிதியின் 95–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.ராசா கலந்து கொண்டார்.
பொதுக்கூட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.ராசா கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசும் போது கூறியதாவது;–
கருணாநிதியின் பிறந்த நாள் தமிழர்கள் பூமி பந்தில் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நடக்கிறது. இது ஒரு தனிமனித பிறந்த நாள் விழா இல்லை. மொழியை முன்னிறுத்தி இனத்தை மீட்க வேண்டும். இனத்தை முன்னிறுத்தி மொழியை காக்க வேண்டும். இதற்காக அரசியல், இலக்கியம், நிர்வாகம் ஆகிய 3 தளத்தில் இயங்கி உச்சத்தை அடைந்த ஒரே தலைவர் கருணாநிதி. அதற்காக அவருக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. எல்லா தலைவர்களுக்கும் சில நேரங்களில் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழக அரசியலில் என்ன அடையாளம் இருக்கிறது என்று தெரியவில்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதில் கடைசியாக மோடி பேசுகிறார், இந்த 4 ஆண்டு காலத்தில் என்னை குற்றம் சாட்டுகிறீர்கள். செயல்படாத அரசு என்று சொல்லுகிறீர்கள். நான் என்னவெல்லாம் செய்து உள்ளேன் என்று பட்டியலிடுகிறார். ஆனால் குற்றச்சாட்டுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
வருமான வரி சோதனை
மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது இந்தியாவின் முழு உற்பத்தி திறன் 9.5 சதவீதம். இன்று 4 சதவீதமாக குறைந்து உள்ளது. ஜி.எஸ்.டி.யில் 5 முறை திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஊழல் இல்லாத ஆட்சியை தருவோம் என்று மோடி சொன்னார். ஆனால் அவர் சேர்த்து வைத்து உள்ள ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நல்லவர்களா? சேகர்ரெட்டி ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பர். சேகர்ரெட்டி வீட்டில் கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு. ரூ.80 கோடி. இது எப்படி வந்தது?. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. தற்போது சேகர்ரெட்டி வெளியில் உள்ளார். அந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை கான்டிராக்டர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. இங்கு ரூ.200 கோடி எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஊழல் ஆட்சியை காப்பாற்ற மத்தியில் பா.ஜனதா ஆட்சி. 234 தொகுதி எம்.எல்.ஏ.வும். நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாம் என்று ஒரு மசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பினோம். அது குடியரசு தலைவரின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் நல்ல சேதி வரும் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார். 4 மாதங்களுக்கு பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்ட போது, அந்த மாதிரி ஒரு சட்டம் தமிழ்நாட்டில் இருந்து வரவில்லை என்று தெரியவந்தது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டம் எங்கே இருக்கிறது என்று தெரியாத ஒரு முதல்–அமைச்சர் இங்கு இருப்பதற்கு பதிலாக செத்து போகலாம்.
ஆட்சி மாற்றம்
தூத்துக்குடியில் 99 நாட்கள் போராட்டம் நடந்தது. 100–வது நாள் போராட்டத்தின் போது போலீசார் எந்த வழிமுறைகளையும் பின்பற்றாமல் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. அங்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட மைக்கேல் டயர் என்ற ஜெனரல் தளபதியை அவர் ஓய்வுக்கு பின்னர் உத்தம்சிங் என்ற வாலிபர் சூட்டு கொன்றார். தூத்துக்குடியில் அப்படி ஒரு துப்பாக்கி சூட்டை எடப்பாடி பழனிசாமி நடத்தி உள்ளார். தமிழ்நாட்டில் இன்னொரு உத்தம்சிங் வரமாட்டார் என்று என்ன நிச்சயம்?.
மத்தியில் இருக்கும் மதவாத ஆட்சி, மாநிலத்தில் இருக்கும் ஊழல் ஆட்சி போக வேண்டும் என்றால், பா.ஜனதாவிற்கு எதிராக இருக்கிற எல்லா அரசியல் தலைவர்களையும் கொண்டு அகில இந்திய அரசியலை நடத்தும் திறமையை ஸ்டாலின் பெற்றுள்ளார். விரைவில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாறும். என்று கூறினார். அதன் பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
யார்–யார்?
இந்த கூட்டத்தில், மாவட்ட கழக நிர்வாகிகள் செல்வராஜ், ராஜ்மோகன்செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட அணி செயலாளர்கள் மதியழகன், கஸ்தூரிதங்கம், ஜான் அலெக்சாண்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.