தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை மத்திய அரசு காப்பாற்றி வருகிறது தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா பேச்சு
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை மத்திய அரசு காப்பாற்றி வருகிறது, என தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா தெரிவித்தார்.;
திருச்செந்தூர்,
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை மத்திய அரசு காப்பாற்றி வருகிறது, என தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா தெரிவித்தார்.
தி.மு.க. பொதுக்கூட்டம்
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தி.மு.க. தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில், திருச்செந்தூர் தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராமஜெயம், ஜனகர், அனஸ், நடராஜன், ஜோதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் வரவேற்று பேசினார்.
தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
ஆ.ராசா பேசும்போது கூறியதாவது:-
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து
நமது நாட்டில் தற்போது அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த 1971-ம் ஆண்டிலேயே தமிழகத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதியை ஏற்படுத்தியவர் கருணாநிதி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய அம்பேத்கர், பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்ற விரும்பினார். அதனை பலர் எதிர்த்ததால், அவரது காலத்தில் அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த 1989-ம் ஆண்டு பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி, அம்பேத்கரின் கனவை நிறைவேற்றியவர் கருணாநிதி. அதனை கடந்த 2006-ம் ஆண்டு இந்தியா முழுவதும் அமல்படுத்தி உள்ளனர். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கருணாநிதி.
மத்திய அரசு காப்பாற்றி வருகிறது
தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது என்று அ.தி.மு.க.வினர் புகார் கூறுகின்றனர். ஆனால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் வாக்களிக்கின்றனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஜனாதிபதிக்கு அனுப்பியதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, அப்படி ஒரு கடிதமே ஜனாதிபதி அலுவலகத்துக்கு வரவில்லை என்று கூறுகின்றனர். இது தான் அ.தி.மு.க. அரசின் சாதனை.
ஊழலில் திளைக்கும் அ.தி.மு.க. அரசை மதவாதத்தில் மூழ்கிய மத்திய பா.ஜ.க. அரசு காப்பாற்றுகிறது. இவர்களுக்கு இடையே சுமூக உறவு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் வெற்றிவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், பூபதி, பிரம்மசக்தி, மாவட்ட அவை தலைவர் அருணாசலம், மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், முகமது அப்துல்காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.