சட்டசபை செயலாளருடன் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் சந்திப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவினை வழங்கினார்கள்
புதுவை பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் சட்டசபை செயலாளரை சந்தித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவினை வழங்கினார்கள்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபைக்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை மத்திய அரசு மாநில அரசின் பரிந்துரையின்றி நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. மற்றும் தனலட்சுமி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. மேலும் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்ற நடவடிக்கையில் பங்கேற்க அனுமதிப்பதிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய உத்தரவினை பாரதீய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயரை சந்தித்து வழங்கினார்கள். அப்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.