நயினார்கோவில் யூனியன் பகுதியில் குடிநீருக்கு அவதிப்படும் கிராம மக்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

நயினார்கோவில் யூனியன் பகுதியில் குடிநீருக்காக மக்கள் அவதிப்பட்டு வருவதால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2018-07-23 22:30 GMT

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா, நயினார்கோவில் யூனியன், அஞ்சாமடை கிராமத்தில் சுமார் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் காவிரி குடிநீர் குழாய் இணைப்பில் மின் மோட்டார் பழுதடைந்து உள்ளதால் இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று தள்ளுவண்டிகள் மூலம் தண்ணீர் எடுத்து வரவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதே போன்று நயினார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மின் மோட்டார் பழுது உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:–

அஞ்சாமடை கிராமத்தில் காவிரி குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் பழுதடைந்து விட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தினமும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று ஊர் எல்லையில் தள்ளுவண்டிகள் மூலம் தண்ணீர் எடுத்து வருகிறோம்.

குடிநீருக்காக மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை இருந்து வருகிறது. சிறு சிறு பழுதுகளை கூட அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய முன் வராததால் குடிநீருக்கு நாங்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களின் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்